13 மே, 2012

பாஞ்சாலங்குறிச்சி(பாளையக்காரர் (முத்தரையர்) ) கோட்டையில் கலவரம் :


ஓட்டப்பிடாரம் :பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை திருவிழாவில் நள்ளிரவில் ஏற்பட்ட கலவரத்தில் டிஎஸ்பி உட்பட்ட 21 பேர் காயமடைந்தனர். கலவரத்தில் வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் 10க்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் இருதரப்பினரைச் சேர்ந்த 53 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. இதைப்போல் கோட்டையில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கனார் குலதெய்வமான கட்டனகருப்பசாமி கோயில் சித்திரைத் திருவிழாவும் நடந்தது. 
கோட்டை திருவிழாவினை முன்னிட்டு தமிழகமெங்கும் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகை தந்தனர். நேற்று முன்தினம் இரவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் மற்றும் ஊமத்துரை தொண்டர் படையினர் எடுத்து வந்த 100க்கும் மேற்பட்ட தொடரோட்ட ஜோதிகள் பாஞ்சாலங்குறிச்சி வந்தடைந்தன. அதுபோல் கவர்னகிரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வீரன் சுந்தரலிங்கனார் குலதெய்வ வழிபாட்டிற்காக போலீசார் பாதுகாப்புடன் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். 
அங்கு அவர்கள் கட்டனகருப்பசாமி கோயிலில் சாமிகும்பிட்டபின் அக்கிராம மக்கள் சார்பாக கரகாட்டம் நடந்தது.
அதுபோல் வீரசக்கதேவி ஆலயம் அருகிலும் ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவை நடந்தது. இரவு 12 மணியளவில்சுந்தரலிங்கனார் திடலில் நடந்த கரகாட்ட கூட்டத்தின் மக்கள் மீது கட்டபொம்மன்கோட்டை சுவர் உள்பகுதியில் இருந்து சிலர் கற்களை வீசினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பரபரப்பை தணித்து கரகாட்ட நிகழ்ச்சியை தொடர வைத்தனர். ஆனாலும் மீண்டும் அந்த கும்பல் சரமாரியாக கற்கள் வீசியதால் கரகாட்ட நிகழ்ச்சியை போலீசார் இடையிலேயே நிறுத்திவிட்டு, அங்கிருந்த மக்களை வெளியேற்றினர். 
அப்போது கற்கள் வீசப்பட்டதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜகோபால், இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், பார்த்திபன், கிருஷ்ணன் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 6 போலீசார் காயமடைந்தனர். அதுபோல் பாஞ்சாலங்குறிச்சி பாலகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்டம், சி.புதூர் பிரபாகரன், குலசேகரநல்லூர் ராமகிருஷ்ணன், சிவகிரி தாலுகா, ராயகிரிநாகராஜன், வடக்கு ஆவரங்காடு முத்துமாலையம்மாள்(54), ஆதனூரைச் சேர்ந்த மொட்டைச்சாமி(23), உத்தண்டராஜ், தொண்டைமான் புதுக்கோட்டை மணல்மேல்குடி சரவணன்(20), விளாத்திகுளம் தாலுகா நாகலாபுரம் காசிராஜன்(32), கச்சேரிதளவாய்புரம் சண்முகராஜ்(29), விருதுநகர் முருகன் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிலரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 
இதற்குள் கலவரம் தீயாக பரவியதால் போலீசார் கோட்டைக்குள் சென்று கலவரத்தில் கற்களால் எரிந்தவர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கிடையே வடக்கு ஆவரங்காடு பகுதியில் சென்ற விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியைச் சேர்ந்த வேன் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதுபோல் அப்பகுதி வழியாக சென்ற 10க்கும் மேற்பட்ட வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. அதில் சிறப்பு பஸ்சின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. அப்பகுதியை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்து இரவு 3 மணிக்குள் அனைத்து வாகனங்களையும் பாதுகாப்பாக பாஞ்சாலங்குறிச்சியை விட்டு அப்புறப்படுத்தினர். 
இந்த கலவரம் தொடர்பாக ஐஜி.,ராஜேந்திரதாஸ், டிஐஜி.,வரதராஜூலு, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி.,ராஜேந்திரன், விருதுநகர் மாவட்ட எஸ்பி.,நஜ்மல்கோடா ஆகியோர் பார்வையிட்டனர்.
தற்போது அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட 53 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் காரணமாக நேற்று நடக்க இருந்த மாட்டுவண்டிப் போட்டி, 2ம் நாள் அரசு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது