19 மே, 2012

முத்தரையர் சங்க தலைவர் மகன் உள்ளிட்ட 6 பேர் அதிரடி கைது

திருச்சி: கடன் வாங்கிய டாக்டர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரது மருத்துவமனையை கைப்பற்ற முயன்ற தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவரின் மகன் உள்ளிட்ட ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி-திண்டுக்கல் ரோட்டிலுள்ள தீரன்நகரில் நவீன் மருத்துவமனையை நடத்தி வருபவர் டாக்டர் ராமமூர்த்தி. லால்குடியைச் சேர்ந்த இவர் தனது மனைவியும், டாக்டருமான ஸ்வேதாவுடன் மருத்துவமனையின் மாடியில் வசித்து வந்தார்.
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தலைவர் விஸ்வநாதனிடம் 76 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக தனது சொந்த ஊரான லால்குடி மணக்காலில் உள்ள வீட்டை எழுதி கொடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக டாக்டர் ராமமூர்த்தி வாங்கிய கடனுக்கு சரியாக வட்டி செலுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் மகன் ராம்பிரபு உள்ளிட்ட சிலர், டாக்டரிடம் பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு அவர் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் ராம்பிரபு, அவரது உறவினர் தர்மராஜ் உள்ளிட்ட சிலர் நவீன் மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்க்க முயன்றுள்ளனர். அப்போது அவர் அங்கு இல்லை. இதையடுத்து மருத்துவமனையின் மாடியில் உள்ள வீட்டில் இருந்த டாக்டரின் மனைவியிடம் கடன் குறித்து ராம்பிரபு கேட்டுள்ளார்.
அவர், "டாக்டர் ஊரில் இல்லை' என்று கூறிய பதிலால் ஆத்திரமடைந்த ராம் பிரபுவும், அவருடைய ஆட்களும், "டாக்டரின் மனைவியை கெட்ட வார்த்தைகளால் திட்டி, பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவோம்' என்று மிரட்டியுள்ளனர்.
இதை தட்டிக்கேட்ட டாக்டரின் டிரைவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து டாக்டர் ராமமூர்த்தியும், அவரது மனைவியும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் கடந்த 23ம் தேதி புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் விசாரணை நடத்தி, நேற்று காலை 10 மணிக்கு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் விஸ்வநாதன் மகன் ராம்பிரபு (32), அவரது உறவினர் தர்மராஜ் (36), ஆதரவாளர்கள் சிங்கபெருமாள் (30), செந்தில்குமார் (23), சுடலைமணி (22) மற்றும் மனோகர் (42) ஆகிய ஆறுபேரையும் எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆறுபேர் மீதும் கொலைமிரட்டல், அதிக வட்டி வசூலித்தல், பெண் கொடுமை உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ராஜேந்திரன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறைலடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆறு பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி முக்கிய புள்ளியான விஸ்வநாதன் மகன் ராம்பிரபு தனக்கும், தனது மனைவிக்கும் கொலைமிரட்டல் விடுத்தது குறித்து, டாக்டர் ராமமூர்த்தி போலீஸ் டி.ஜி.பி., ராமனுஜத்திடமும் புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது