16 டிச., 2012

அருள்மிகு கதிர்நரசிங்கப் பெருமாள், தேவர்மலை


அருள்மிகு கதிர்நரசிங்கப் பெருமாள், தேவர்மலை, கரூர்

ஒரு காலத்தில் செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் ஊழ்வினை மற்றும் ஒற்றுமை இல்லாமை காரணமாக அனைத்தையும் இழந்து அதிகார உரிமை துறந்து அநாதரவாக நிற்பார்கள்.

பொருளாதாரத்தில் பெருமளவு அவர்கள் நசிந்து போயிருந்தாலும் ஒரு காலத்தில் பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் என்கிற காரணத்தால் அந்தக் குடும்படத்தின் பெருமையும், புகழும் என்றென்றும் உயர்ந்த மதிப்புடன்தான் இருக்கும். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று கிராமங்களில் ஒரு சில குடும்பத்தினரை அடையாளம் காட்டிப் பேசுவார்கள். அதுபோன்ற குடும்பங்களில் சிலது இருக்கும். சிலது இருக்காது. உதாரணத்துக்கு அவர்களிடம் புகழ் இருக்கும். பொருளாதாரம் இருக்காது. அன்பு இருக்கும், அதிகாரம் இருக்காது. உண்மை இருக்கும், ஊழியர்கள் இருக்கமாட்டார்கள். வரலாறு இருக்கும். வசதிகள் இருக்காது.

கரூர் தேவர்மலை ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் ஆலயமும் கிட்டத்தட்ட இந்த ரகம் என்றே சொல்லலாம். அதாவது ஒரு காலத்தில் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அனைத்து உற்சவங்களும் விமரிசையாக நடந்து வீதிகளில் பிரமாண்ட தேர் ஓடி, பக்தி மழையில் திளைத்திருந்த திருக்கோயில்தான் இது. ஆனால் இன்று நிலை வேறு.

பவித்திரம் இருக்கிறது. பக்தர்கள் இல்லை. குறையாத சாந்நித்யம் இருக்கிறது; கோலாகல உற்சவங்கள் இல்லை. ஆன்மிக மனம் அளவில்லாமல் கமழ்கிறது. மணம் வீசும் மடப்பள்ளி இல்லை.

ஸ்ரீநரசிம்மர் ஆலயம், ஆண்டுகள் பல ஆனாலும் சிதிலங்களையும் சின்னா பின்னங்களையும் தன் உடலில் வாங்கிக் கொண்டாலும் ஒருவித கம்பீரத்துடன்தான் திகழ்கிறது.

இது மிகப் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆலயம். தீபஸ்தம்பங்கள், விழா மண்டபங்கள், சுற்றுப் பிராகாரம், சிற்பநயம்மிக்க தேர், தேவர்கள் உண்டாக்கிய புனிதமான தீர்த்தம், வேண்டியதை அந்தந்க் கணமே அருளும் ஸ்ரீநரசிம்மர், திருமணப் பேறு அருளும் ஸ்ரீகமலவல்லித் தாயார் என்று நிறைவான தரிசனத்தைத் தரும் ஆலயம் இது. சுமார் 700 வருடங்களுக்கு முற்பட்ட மன்னர்கள் காலத்துக் கட்டுமானம்.

கரூர் தேவர்மலை ஸ்ரீகதிர்நரசிங்க பெருமாள் ஆலயம் தோன்றி சுமார் 2500 வருடங்களுக்கும் மேலே இருக்கும் என்கிறார்கள்.

இரண்யனை சம்ஹாரம் செய்த பின்னும் சினம் தனியாமல் சீறி அலைந்த ஸ்ரீநரசிம்மரை தேவர்கள் இங்கே ஆசுவாசப்படுத்தி அமர வைத்து, மோட்ச தீர்த்தம் ஏற்படுத்தி, திருமஞ்சனம் செய்து சினம் தணித்தார்களாம். மோட்ச தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் சனி பகவான் சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகிவிடும். என்பது ஐதீகம்.

ஒரு காலத்தில் 745.5 ஏக்கர் நிலங்கள் இந்த ஆலயத்துக்குச் சொந்தமாக இருந்து சுபிட்சம் நிலவியதும், இன்று இருப்பதோ வெறும் அரை ஏக்கர் மட்டுமே என்றாகிறார்கள். 745 ஏக்கர் எங்கே என்று தெரியவில்லையாம்.

தேவர்மலைக்குச் சுற்று வட்டாரத்தில் உள்ள எந்த ஒரு கோயிலிலும் வீட்டிலும் விசேஷம் என்றாலும் இந்த நரசிம்மர் ஆலயத்துக்கு வந்து, அவரை வழிபட்டு, மோட்ச தீர்த்தத்தில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்வது வழக்கம்.

அக்கம்பக்கத்து கிராமங்களைச் சார்ந்த உபயதாரர்கள் அந்தக் காலத்தில் தங்களுக்கென ஆலயத்துக்கு அருகே ஒரு மண்டபம் கட்டி வைத்திருந்தார்கள். திருவிழாக் காலங்களில் தங்களது ஊர்களில் இருந்து வண்டி கட்டிக்கொண்டு வந்து உற்சவருக்கு வழிபாடுகள் செய்து உபசரிப்பார்களாம். இதற்கென அமைக்கப்பட்ட மண்டபங்கள் இப்போதும் ஒரு சாட்சியாக இருக்கின்றன.

அறநிலையத்துறை ஆவணங்களின் படி மூலவர் பெயர் கதிர் நரசிங்க பெருமாள். ஆதிகாலத்து ஆவணங்களின்படி உக்கிரநரசிம்மர்.

இரண்யனை வதம் செய்வதற்காகவும், தன் பக்தனும் இரண்யனின் மகனுமான பிரகலாதனைக் காப்பாற்றவும் வேண்டி தூணைப் பிளந்து கொண்டு அவதரித்தவர்தான் ஸ்ரீநரசிம்மர். பிரகலாதனுக்கு, அவன் தந்தை இரண்யனால் ஆபத்து நேரிடும்போதெல்லாம் காத்து வந்த பரமாத்மா இரண்யனை சம்ஹாரம் செய்யும் வேளை வந்தவுடன் சிங்க முகத்துடனும் மனித உடலுடனும் அவதரித்த கதை அனைவருக்கும் தெரியும். இரண்யனை தன் மடியில் போட்டுக் கொண்டு ஆக்ரோஷத்துடன் அவன் வயிற்றைக் கிழித்து குடலை உருவி அழித்தார் நரசிம்மர். எனினும் அவரது ஆக்ரோஷம் அடங்கவில்லை. ருத்திரம் தாங்காமல் பேரிரைச்சலுடன் பூமியை வலம் வந்தார். இதைக் கண்டு தேவர்களும் ரிஷிகளும் பயந்தனர். இந்த அவதாரத்தால் பூலோகத்தில் இனி என்னென்ன பிரளயங்கள் ஏற்படப் போகின்றதோ என்று கவலையுற்ற அவர்கள், இந்தத் தலத்தில் ஸ்ரீநரசிம்மரின் நாமத்தைத் துதித்தபடி அவரை வழிமறித்து சாந்தப்படுத்தினர். நரசிம்மரை அங்கேயே நிலை கொள்ளச் செய்தனர்.

அதன்பின் தேவர்கள் ரிஷிகளும் சேர்ந்து மோட்ச தீர்த்தம் என்கிற புனித தீர்த்தத்தை அருகில் ஏற்படுத்தினர். அந்த நீரால் நரசிம்மருக்குத் திருமஞ்சனம் செய்வித்தனர். நறுமணம் கமழும் தூபங்களை அர்ப்பணித்தார்கள். வாசனை வீசும் மலர் மாலைகளை அணிவித்தார்கள். நரசிம்மர் உளமகிழ்ந்தார். இவர் உக்கிர நரசிம்மர் என்றாலும் யோகத்தில் இருப்பவர். அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது. உலக்கை இடிக்கும் ஓசையும் குழந்தைகள் அழுகும் சத்தமும் இவருக்குக் கேட்கக்கூடாது. யோகம் தடைபடக்கூடாது. அதனால்தான் ஊரை விட்டு வெளியே குடி கொண்டுள்ளார் என்றார் ஆலயத்தில் தற்போது ஆராதனை செய்து வரும் பாலாஜி பட்டாச்சார்யார்.

இடப்பக்கமும், வலப்பக்கமும் உற்சவர் மண்டபங்கள் பிரமாண்டமாக இருக்கின்றன. திருவிழாக் காலங்களில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஆலயத்தை விட்டு வெளியே வந்த பின் இங்கு சற்று நேரம் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார். அந்தக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டுமாம்.

அடுத்து மிகப் பெரிய கல்தூணால் ஆன துவஜஸ்தம்பம். ராஜகோபுரம் இல்லை. கருங்கல் தளங்களைக் கொண்ட மொட்டைக் கோபுரம். பிரமாண்டமான கதவுகள். உள்ளே சென்றால், மிகப் பரந்த வெளி. இங்கு நமக்கு நேராக ஸ்ரீநரசிம்மரின் சந்நிதி தீபஸ்தம்பம். பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் மண்டபம், இவற்றில் பலிபீடமும், கொடிமரமும் ஏகத்துக்கும் சேதமாகி உள்ளன. முன்மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்று விஸ்தாரமாக அமைந்துள்ளது ஸ்ரீநரசிம்மர் சந்நிதி.

இந்த தேவர் மலைப் பகுதியை, மதுரைப் பாண்டியர்களிடம் இருந்து கைப்பற்றினர் நயக்கர்கள். அப்போது கரூருக்கு உட்பட்ட பகுதியை ஆண்டு வந்தார் பாப்பன சாமைய நாயக்கர். அவரது காலத்தில் தேவர் மரி என்கிற இந்தக் கிராமத்தில் ஏராளமான மாடுகள் இருந்தன. காலையில் மேய்ச்சலுக்குப் போய் மாலையில் பால் சுரக்கும். ஆனால் காலை வேளையில் அவற்றின் மடி வற்றி விடும். பட்டியை கவனித்து வந்தவர் இதென்னடா அதிசயம் என்று குழம்பி, இரவு நேரத்தில் மட்டும் மாடுகள் எங்கே பாலைச் சுரக்கின்றன என்று கண்டறிய விரும்பி மாடுகளைக் கண்காணித்தார்.

கும்மிருட்டு வேளையில் சிறுவன் ஒருவன், மாடுகளின் மடியில் வாய் வைத்து பால் குடிப்பதைக் கண்டார். தொடர்ந்து மாடுகளின் மடி வற்றிப் போவதற்கு இவனே காரணம் என்று கருதி விசுக்கென பாய்ந்து அவனைப் பிடித்து அங்குள்ள ஓர் ஆலமரத்தில் கட்டிப் போட்டார். உடனே அரசனுக்கு தகவல் அனுப்பினார். இந்தத் தகவலை அறிந்து, மறுநாள் காலை பாப்பன சாமைய நாயக்கர் உட்பட ஊர்க்காரரர்கள் அனைவரும் ஆலமரத்தின் அடியில் வந்து பார்க்க, அங்கு கட்டிப் போடப்பட்ட சிறுவனைக் காணவில்லை.

அப்போது அவனைக் கட்டிப் போட்ட பட்டி ஆசாமிக்கு சாமி வந்தது. “நான் வைகுந்தத்தில் இருந்து இங்கு வந்து எழுந்தருளி இருக்கும் நரசிம்ம சாமி. ஆலமரத்தின் அடியில் நான் அவதரித்திருக்கிறேன். எனக்குக் கோயில் கட்டி வழிபடுங்கள். உங்களை எல்லாம் காக்கிறேன்” என்றார். அதன் பின் திருப்பணிகள் தொடங்கி சக்கம நாயக்கரால் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஸ்ரீநரசிம்மரின் திருமஞ்சனத்துக்காகத் தேவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மோட்சதீர்த்தமும் அதுவரை அடையாளம் காணப்படாமல் இருந்தது. நரசிம்மர் பிரதிஷ்டை ஆன காலகட்டத்தில் ஒருவருக்கு அருள் வந்து மீண்டும் அடையாளம் காணப்பட்டது. இங்குள்ள மோட்ச தீர்த்தம்.

“சுவாதி நட்சத்திரத்தன்று காலை பதினோரு மணிக்கு இவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெறுகின்றன. இவரை தரிசிப்பதால் மனோ வியாதிகள் அகலும். குடும்பப் பகைகள் நீங்கி, இணக்கம் ஏற்படும். திருமணங்கள் கைகூடும். வழக்குகளில் வெற்றி தேடி வரும். பில்லி சூன்யம் முதலான தீய சக்திகள் பறந்தோடும். பிரதோஷ காலத்தில் நரசிம்மரை தரிசித்து ஆலயத்தை பதினாறு முறை வலம் வந்தால் எண்ணியது நிறைவேறும்” என்றார் அர்ச்சகர். இடப்பக்கம் கமலவல்லித் தாயார் சந்நிதி. இவருக்கும் தனியே ஒரு தீபஸ்தம்பம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. இதை அடுத்து ஊஞ்சல் மண்டபம். திருக்கல்யாண உற்சவங்கள் இங்குதான் நடக்கும். தொடர்ந்து முன்மண்டபம், மகா மண்டபம் அர்த்த மண்டபம், கருவறை என்று தாயார் சந்நிதியும் விசாலமான அமைப்புடன் காணப்படுகிறது. மகா மண்டபத் தூண்களில் அடியார்கள் மற்றும் நாயக்க மன்னர்களது உருவங்கள் அமைந்துள்ளன. இங்கும் வெளவால்கள் வாசம் செய்கின்றன.

தாயாரின் திருவுருவில் அழகு ததும்புகிறது. உற்சவங்கள் இல்லாமல் போனாலும் தாயாரின் திருமுகத்தில் உற்சாகத்துக்குக் குறைவில்லை. பிராகாரத்தில், துவக்கத்தில் மடப்பள்ளி, தூர்ந்து போன கிணறு, ஸ்ரீராமானுஜர் மற்றும் நம்மாழ்வார் ஆகியோருக்கு சந்நிதிகள், ஸ்தல விருட்சம் வில்வம், பைரவர், சிவலிங்கம், யாக சாலை ஆகியவற்றைக் காண்கிறோம்.

மார்கழி மாதத்தில் கருடசேவை, வைகாசியில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி பத்து நாள் உற்சவம் என பல விழாக்கள் விமரிசையாக நடந்து வந்துள்ளன. ஆலயத்துக்குச் சொந்தமான உற்சவர் விக்கிரகங்கள், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலீஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம்.

ஆலயத்தின் பின்பக்கம் மோட்ச தீர்த்தம் உள்ளது. சில படிகள் இறங்கிக் கீழே சென்றால், சிறு குளம் போல் காணப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை தண்ணீர் எப்போதும் இருந்து வந்ததாம். தற்போது இல்லை. பக்கத்திலேயே ஒரு போர் போட்டிருக்கிறார்கள். இதுவும் மோட்ச தீர்த்தம்தான் என்கிறார்கள். எனவே தற்போது வருபவர்கள், இந்த போர் தண்ணீரைத் தங்கள் தலையில் தெளித்துக் கொண்டு செல்கிறார்கள். இராமர், சீதை, இலட்சுமணர், அனுமார் ஆகியோர் இந்த மோட்ச தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தார்களாம். எனவே அவர்களது உருவங்கள் இங்கே வடிக்கப்பட்டுள்ளன. நாயக்க மன்னரது உருவமும் காணப்படுகிறது.

ஸ்ரீநரசிம்மர் ஆலயத்தில் தற்போது ஒரு கால பூஜை நடந்து வருகிறது. தினமும் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை ஆலயம் திறந்திருக்கும். இவர் ஏகாந்த மூர்த்தி என்பதால், தொந்தரவு கூடாதாம். அதனால் மாலை ஆறு மணிக்கே நடை அடைத்து விடுகிறார்கள். ஆனாலும் விசேஷ காலங்களில் இந்த நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது.

நாளை என்பதே நரசிம்மனிடத்தில் இல்லை என்பார்கள். அதாவத, முறையான பிரார்த்தனைகளை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்ற சற்றும் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் தீர்த்து வைப்பவர் நரசிம்மர். பக்தர்களது துன்பங்களை அந்த விநாடியிலேயே களைவாராம். ஆனால் காலம் காலமாக இவர் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது விந்தையே!

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........