12 ஜூன், 2012

சோழர்கள் முத்தரையர்களே:


சோழர்கள் முத்தரையர்களே:
கரிகால சோழ சூரிய முத்தரையர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமலைராயா சமுத்திரம் என்னும் ஊரிலிருந்து திருமலைநம்பி என்பவர் எழுதிய கடிதத்தில்தான் அவ்வருமையான செய்தி இருந்தது. அவர் தாம் கண்ட ஒரு செப்பேடடில் "கரிகால சோழ குழுவினராகிய சூரிய முத்தரையர்" என்ற வாசகம் உள்ளது என்றும், அச்செப்பேடு திருவரங்குளம் கிராமம் கோவில்பட்டியில் உள்ள பிச்சன் என்பவரிடம் என்றும் உள்ளது என்றும் எழுதியிருந்தார். "கரிகால சோழ குழுவினராகிய சூரிய முத்தரையர்" என்ற செய்தி தமிழ் வரலற்றுக்கு அருமையான செய்தி. முத்தரையர்கள் கரிகாலனோடு தொடர்பு கொண்டவர்கள் என்பதும், சூரியகுலத் தொடர்பு கொண்டவர் என்பதும் தெளிவாகிறது அல்லவா? சோழர்கள் சூரியவம்சத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
கரிகாலன் மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள் என முன்னே கண்டோம். இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக் குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்-முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோமல்லவா? கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள். கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்று பண்டைய தமிழ் வரலாறு கூறும். இத் தமிழ் மரபைக் கங்கர்களது செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
கங்க அரசன் துர்விநீதனுக்கு மகன் வயிற்று மகன் (பெயரன்) ஸ்ரீ விக்ரமன் என்று ஒருவன் இருந்தான். அவனும் பின்னர் கங்க அரியணை ஏறினான். அவனும் சோழ இளவரசியை மணந்தான். அவளைக் கூறும்போது கங்கர் செப்பேடு "காவிரிக்குக் கரை கட்டிய கரிகால சோழனின் குலத்து உதித்தவள்" என்று "காரித காவேரீதீர கரிகால சோழ குலவம்ச சோழ நிருபதி புத்ரீ" எனப் புகழ்கிறது. கங்கர்கள் தம்மைக் கரிகால சோழ குலப் பெண் வழி வந்தவர்கள் என்று கூறிப் பெருமைப்படுகிறார்கள்.
இருவரும் ஒரு குடியினர்
இப்பொழுது பாருங்கள்! எங்கேயோ மைசூர்ப் பகுதியை 1300 வருஷங்களுக்கு முன் ஆண்ட கங்க அரசர்கள் தம்மை முத்தரையர் என்றும், கரிகால சோழகுலத் தொடர்புடையவர் என்றும் தமது செப்பேடுகளில் கூறிக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு தமிழ்ச் செப்பேட்டில் முத்தரையர் கரிகால சோழ குலத் தொடர்புடையவர் என்று குறிக்கிறார்கள் என்றால், எவ்வளவு அரிய சான்றுடன் கூடிய வரலாற்று ஒற்றுமை. இவ்வொற்றுமையின் அடிப்படையில் இருவரும் ஒரு குடியினரே என்று வரலாற்று வல்லுநர் கொள்வது தவறாகாதல்லவா! சோழராட்சியிலும், பின்னர் பாண்டியராட்சியிலும் கி.பி. 10ஆவது நூற்றாண்டு முதல் 14-15ஆவது நூற்றாண்டு வரை கங்கர்முத்தராசர் குடியினர் புதுக்கோட்டைப் பகுதியில் தானைத் தலைவர்களாகவும் வளநாட்டை ஆளும் தலைவர்களாகவும் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகின்றனர்.
புதுக்கோட்டைப் பகுதியில் இன்று வாழும் முத்தரையர் இவ்வழித் தொடர்புடையவர்கள் என்பதில் ஐயமில்லை. இத்தொடர்பை நமக்குச் சான்றுகளோடு எடுத்து இயம்புவை நமது செப்பேடுகள் அல்லவா! இன்னும் நமது கிராமங்களில் உள்ள செப்பேடுகளில் எவ்வளவு வரலாற்று உண்மைகள் உள்ளனவோ! இவற்றை நம் கவனத்துக்குக் கொண்டு வருவோருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
வாசகர் கருத்துக்கள்
முத்தரையர்
முத்தரையர் பற்றிய இரா.நாகசாமி அவர்களின் கட்டுரை முத்தரையர் ஆராய்ச்சியில் ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
முத்தரையர் என்ற சொல் தொடர் இரண்டு சொற்களால் ஆனது. திருமய்யம் கல்வெட்டு முத்தரையத் தலைவன் ஒருவனை "அரைசன்" என்று குறிக்கிறது. குன்னாண்டார் கோயில் கல்வெட்டில் பல்லவ நந்திவர்மன் காலத்தில் முத்தரையரின் பணியாளன் ஒருவன் "அரையர்கள் அடியான் வாலிவடுகன் ஆன கலிமூர்க்க இளவரையன்" என அழைக்கப்படுகின்றான். திருநெய்த்தானக் கல்வெட்டிலும் இவன் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளான்.
தென் சிறுவாயி நாட்டாரும் இந்நாட்டு அரையர்களும்
தென்மலை நாட்டு வந்தாண்டார் கோட்டை அரையர்களில்
வாரப்பூர் அரையர்களில் ஒட்டையன் வாரப்பூர் நாடாழ்வான்

என நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் அரையர் என்ற சொல்லைக் காணுகின்றோம். புதுக்கோட்டை அரசர்களும் அவர்கள் முன்னோர்களும் அரையர் மக்கள் எனப்பட்டனர். கொங்கரையர், ஈழத்து அரையர், பல்லவரையர், விழுப்பரையர், கங்கரையர், கலிங்கரையர் என அரசியல் தலைவர்களும் அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களிலும் அரையர் என்ற பெயரைக் காணுகின்றோம். எனவே முத்தரையர் என்பதிலும் ஈற்றில் உள்ள சொல் அரையர் என்பதில் ஐயமில்லை.
சிலர் முதற் சொல்லை மூன்று என்று கொள்கின்றனர். தொல்காப்பியம் நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் கூறும் புணர்ச்சி விதிப்படி மூன்று+அரையர் = முவரையர் என்றே ஆகவேண்டும். அவர்கள் மூவரையர் என எங்கும் அழைக்கப்பட்டதில்லை முத்தரையர் என்றே குறிக்கப்பெறுகின்றனர். முத்து + அரையர் எனவும் வருவதற்கு இல்லை. இவர்கட்கும் முத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ஆகவே முதற்சொல்லை முது அல்லது மூத்த என்று கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குடுமியாமலை போன்ற சில இடங்களில் இவர்கள் பெயரைக் கல்வெட்டுக்கள் மூத்த அரையர் எனப் பிரித்தே குறிக்கிறது. இதனை மூத்த + அரையர் எனப் படிக்க இயலாது. கல்வெட்டு மரபுப்படி இவ்விடங்களில் மூத்த அரையர் என்றே படிக்க வேண்டும்.
முத்தரையர் கர்நாடகத் தொடர்புடையவர்களே, பகாப்பிடுகு முத்தரையன், பெரும்பிடுகு முத்தரையன் என்று முத்தரையர் பெயர்களில் காணப்படும். பிடுகு என்ற சொல் இடி என்னும் பொருளுடைய கன்னடச் சொல்லே.
பிற்காலத்தில் முத்தரையர் என்பது அரசர் அளிக்கும் பட்டப் பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது. முத்தரையர் அல்லாதவர்களும் அரசன் அளித்த சிறப்புப் பெயராகப் பூண்டனர். கல்வெட்டுக்கள் இதனை மிகத் தெளிவாகக் குறிக்கின்றன.
புலவர். செ. இராசு
தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்
நான் 18 பட்டயங்களின் நகல்கள் எடுத்து வைத்துள்ளேன். கிட்டத்தட்ட எல்லாப் பட்டயமும் கானாடு-கோனாடு சண்டையில் இறந்துபட்டவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன. பலபிழைகள் உள்ளன. தமிழ் எண் எழுத்தாகவும், சமஸ்கிருதம் கலந்தும் உள்ளன. பல ஊர்களின் பெயர்கள், ஆலயங்களின் பெயர்கள், வளநாடுகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை போன்ற பல பட்டயங்கள் இதுவரை முத்தரைய நாட்டு அம்பலகாரர்களிடம் உள்ளன. ஆலயங்களில் கல்வெட்டாகவும் உள்ளன என்பதைப் பட்டயங்கள் நன்குபுலப்படுகின்றன.
இரா. திருமலைநம்பி திருமலைராய சமுத்திரம் கைக்குறிச்சி 622 303 புதுக்கோட்டை மாவட்டம்
28-10-88 தினமணி தொல்லியல் பகுதி முத்தரையர் கட்டுரையில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. "விருத்தராஜ" என்ற வட சொல் அடிப்படையில் முது அரசர் முத்தரசர் என்ற பெயர் கங்ககுல (சில) மன்னரிடம் காணப்படுவதால் கங்க அரசர்களே முத்தரசர் என்ற முடிவு கூறப்படுகிறது. தெலுங்குச் சோழர்களின் மிகப்பழைய 6ம் நூற்றாண்டுத் தெலுங்குக் கல்வெட்டுகளில் முதுராஜூ என்ற பெயர்களோடு துகராஜூ, யுவராஜூ என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இதனால் முத்தரசு முதுராஜூ என்ற இரு சொற்களின் வழக்கு இச் சொல்லாக்கத்தின் விளக்கத்தில் ஒருபடியாகுமே அன்றி தமிழ்நாட்டு முத்தரையரின் தோற்றத்திற்கு உரிய முடிவாகாது. கங்கரெல்லாம் முத்தரையர் அல்லர். முத்தரையர் என்ற குடிப்பெயர் உடையார் ஒருவரேனும் தன்னைக் கங்கர் என்று கூறிக் கொள்ளவில்லை. மூத்த குடியினர் என்ற பொருள் கங்கர்க்கும், தெலுங்குச் சோழர்க்கும் பொருந்தும். எனினும் தமிழ்நாட்டு முத்தரையர்க்கு எவ்வாறு பொருந்தும் அவர்கள் எந்த முது குடியினர்? தமிழ்நாட்டு முத்தரையர் எவ்வாறு களவரகளவர என்ற பட்டப்பெயர் கொண்டனர்? அவர்களுக்கும் களப்பிரர்க்கும் உள்ள தொடர்பு மற்ற இருவர்க்கும் உண்டா இதுமேலும் ஆய்வுக்குரியது.
கே.ஜி. கிஷ்ணன், மைசூர்
முத்தரையரைப் பற்றிய ஆராய்ச்சி தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமளவுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. வரலாற்றில் மறைக்கப்பட்ட பல உண்மைகளை நாகசாமி அவர்கள் வெளிக்கொணர்ந்து வரலாற்றிற்கு ஒரு புதிய ஒளியினை ஏற்படுத்தியுள்ளார். அதற்காகத் தினமணிக்கும், கட்டுரை ஆசிரியருக்கும் முத்தரை சமுதாயத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வி. சந்திரசேகரன், சென்னை-17
கட்டுரை முத்தரையரைப் பற்றி சில தெளிவான விளக்கங்கள் தருகின்றது. கன்னடம், மலையாள மொழி இரண்டிலும் தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளதை நன்கு விளக்குகின்றது. களப்பிரர்களாகிய முத்தரையர்கள் தமிழர்கள்தாம் என்றும் இவர்கள் கர்நாடகத்தில் தங்கியதால் தமிழும், கன்னடமும் கலந்தன என்று கட்டுரை விளக்குகிறது. இதே போல் தமிழ்ச் சேரர்கள் மலையாளத்தை ஆண்டதனால் மலையாளத்திலும் தமிழ்ச் சொற்கள் வருவதின் காரணமும் நமக்குத் தெரிகின்றது. இக் கட்டுரையினால் முத்தரசர்கள் பல்வேறு இடங்களில் களப்பிரர், கங்கர், விருத்தராஜன், முத்துரசரு என்ற பெயர்களுடன் அழைக்கப்பட்டனர் என்ற கருத்தைக் கல்வெட்டுச் சான்றுகளுடன் திரு. நாகசாமி தெளிவாகக் கூறியுள்ளார்.
மு. திருப்பதி, ஆத்திகுளம்.
தினமணி 28-10-88 இதழில் இரா. நாகசாமி அவர்களின் முத்தராயர் கட்டுரை படித்து இன்புற்றேன். முது + அரையர் = முத்தரையர் என்ற விளக்கம் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முதுகுடிகள் வம்பவேந்தருடன் (புதிய வேந்தர்களுடன்) போரிட்ட நிகழ்ச்சிகள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. தொல்தேவரு என அழைக்கப்பட்ட முதுகுடி அரசர் பற்றிச் செங்கம் பகுதி (செங்கல் நடுகற்கள் தொடர் எண் 1971/62 தொல் பொருள் ஆய்வுத்துறை வெளியீடு ஆண்டு 1972). மேலும் கடப்பை மாவட்டம் திருப்பலூரைச் சேர்ந்த 7ஆம் நூற்றாண்டைய கல்வெட்டு ஒன்றில் எரிகல் முதிராஜூ புண்யகுமாரன் என்ற ரேணாடுச் சோழ அரசன் ஒருவன் குறிப்பிடப்படுகிறான். (Annual Report of Epigraphy 283/193738, Archaeological Survey of India). மேலும் அளப்பரிய ஆதிராஜர் என்று வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுவதும் இத்தகைய முதுகுடி அரசர்களையே என்பது தெளிவு. இத்துடன் ஊர்ப் பஞ்சாயத்தில் வழக்கு தீர்க்கும் மூப்பன், மூப்பாடி போன்ற தலைவர்களின் பெயர்களும் எகிப்திய, துருக்கிய கிராம நிர்வாகியின் பெயராகக் குறிப்பிடப்படும் மூதோர் என்ற சொல்லும் ஆராயத்தக்கவை. அரசு என்ற கண்ணோட்டம் தோன்றுவதற்கு முற்பட்ட தன்னாட்சி நிறுவனங்களாக இவற்றைக் கருதலாம்.
எஸ். இராமச்சந்திரன்
தொல்பொருள் ஆய்வுத்துறை, தஞ்சாவூர்.



கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது