5 ஆக., 2013

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: வரலாறு படைத்தது இந்தியா


மோன்சென்கிளாட்பேச்
பெண்கள் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை வென்று புதிய சரித்திரம் படைத்தது.
ஜூனியர் ஆக்கி
16 அணிகள் இடையிலான பெண்களுக்கான 7–வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஜெர்மனியின் மோன்சென்கிளாட்பேச் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த வெண்கலப்பதக்கத்தை நிர்ணயிக்கும் 3–வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதின. 13–வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை ராணி கோல் போட்டார். பிற்பாதியின் 55–வது நிமிடத்தில் இங்கிலாந்தின் தாமன் அன்னா பதில் கோல் திருப்பினார். இதன் பின்னர் மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால் வழக்கமான நேரத்தில் ஆட்டம் 1–1 என்ற கணக்கில் சமனிலையில் முடிந்தது.
இதையடுத்து வெற்றி தோல்வியை முடிவு செய்ய பெனால்டி ஷூட்–அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் வழங்கப்பட்ட 5 வாய்ப்பில் இந்திய தரப்பில் ராணியும், இங்கிலாந்து தரப்பில் டெப்ரோன்ட் எமிலியும் கோல் அடித்தனர். மற்ற அனைத்து வாய்ப்புகளும் வீணாகின. இதுவும் 1–1 என்று சமநிலை ஆனதால், ‘சடன்டெத்’ முறை கொண்டு வரப்பட்டது.
இந்தியாவுக்கு பதக்கம்
‘சடன்டெத்’ முறையின் முதல் வாய்ப்பில் இந்திய வீராங்கனை ராணியும், இங்கிலாந்து வீராங்கனை டெப்ரோன்ட் எமிலியும் கோலாக்கினர். 2–வது வாய்ப்பை பூனம் ராணி (இந்தியா), மெக்கலின் சோனா (இங்கிலாந்து கேப்டன்) இருவரும் கோட்டை விட்டனர். 3–வது வாய்ப்பில் இந்தியாவின் 17 வயதான நவ்னீத் கவுர் கோலாக்கினார். அதே சமயம் இந்த வாய்ப்பை இங்கிலாந்தின் தாமன் அன்னா தவற விட இந்தியாவின் வெற்றி உறுதியானது. பெனால்டி ஷூட்–அவுட் முடிவில் இந்திய அணி 3–2 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்திற்கு முத்திட்டு புதிய வரலாறு படைத்தது.
24 ஆண்டுகால பெண்கள் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி வரலாற்றில் இந்திய அணி பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். பலம் குறைந்த அணியாக வர்ணிக்கப்பட்ட இந்தியா, பதக்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்–அவுட்டின் போது இந்தியாவின் கோல் கீப்பராக கடைசி நேரத்தில் நிங்கோம்பாமுக்கு பதிலாக பைகான் பாய் செயல்பட்டார். இந்த வாய்ப்புக்கு முன்பாக அந்த உலக கோப்பையில் ஒரு நிமிடம் கூட களம் காணாத அவர் பெனால் ஷூட்–அவுட்டில் அருமையாக செயல்பட்டதை அனைத்து வீராங்கனைகளும் கட்டித்தழுவி பாராட்டினார்கள்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........