5 ஆக., 2013

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா முதலிடம்



துபாய்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பந்து வீச்சு தர வரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதல் முறையாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் தர வரிசை
ஜிம்பாப்வே–இந்தியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 5–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டி தொடர் முடிவில் அணிகள் மற்றும் பேட்டிங், பந்து வீச்சில் வீரர்களுக்கான தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது.
இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
இதன்படி இந்திய அணி (123 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 2–வது இடத்தில் ஆஸ்திரேலிய அணி (114 புள்ளிகள்) 2–வது இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி (112 புள்ளிகள்) 3–வது இடமும், இலங்கை அணி (111 புள்ளிகள்) 4–வது இடமும், தென் ஆப்பிரிக்க அணி (105 புள்ளிகள்) 5–வது இடமும், பாகிஸ்தான் அணி (102 புள்ளிகள்) 6–வது இடத்திலும் இருக்கின்றன.
பேட்டிங் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா முதலிடத்திலும், டிவில்லியர்ஸ் 2–வது இடத்திலும் தொடருகின்றனர். இலங்கை வீரர் சங்கக்கரா 3–வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்திய வீரர் விராட்கோலி ஒரு இடம் பின்தங்கி 4–வது இடம் பெற்றுள்ளார். இந்திய வீரர்கள் சுரேஷ்ரெய்னா ஒரு இடம் முன்னேறி 17–வது இடத்தையும், ஷிகர் தவான் 16 இடங்கள் முன்னேற்றம் கண்டு 23–வது இடமும் பிடித்துள்ளனர்.
பந்து வீச்சில் ஜடேஜா முதலிடம்
பந்து வீச்சு தர வரிசையில் ஜிம்பாப்வே தொடரில் 5 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரினுடன் இணைந்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய அமித் மிஸ்ரா ஜிம்பாப்வே தொடரில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்து 47 இடங்கள் முன்னேறி 32–வது இடம் பிடித்துள்ளார்.
ஒருநாள் போட்டி பந்து வீச்சு தர வரிசையில் முதலிடம் பிடித்த 4–வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற ரவீந்திர ஜடேஜா, 17 வருடத்துக்கு பிறகு ஒருநாள் போட்டி தர வரிசையில் முதலிடம் பிடித்த இந்தியர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். கடைசியாக 1996–ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் இந்திய அணி முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே முதலிடம் வகித்துள்ளார். ஒருநாள் போட்டி பந்து வீச்சு தர வரிசையில் ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த கபில்தேவ் (1989, மார்ச்), மனிந்தர்சிங் (1987 டிசம்பர் முதல் 1988 நவம்பர் வரை) ஆகியோர் முதலிடத்தில் இருந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........