15 மார்., 2013

இலங்கை அரசின் போர்க்குற்றம் : அரசியல் கட்சிகள் கருத்து



இலங்கை அரசின் போர்க்குற்றம் : அரசியல் கட்சிகள் கருத்து
பதிவு செய்த நாள் -
மார்ச் 15, 2013  at   8:29:07 AM
 
லங்கை போர்க் குற்றம் தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட புதிய வீடியோ காட்சிகள், தமிழ் ஆர்வலர்களிடையே கடும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், உலகத் தமிழர் பேரவை இக்காட்சிகளை புதிய தலைமுறைக்கு வழங்கியது.
இலங்கைத் தமிழர்களை கொத்துக் கொத்தாக, ஆயுதம் தாங்கிய சிங்களப் படையினர், கொடூரமாக கொன்று குவிக்கும் காட்சிகள் இந்த ஆவணப்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த படுகொலைகளில் மிக முக்கியமான சாட்சியாக, அடையாளம் தெரியாத சிறுவன் ஒருவன், சிறைப்பிடிக்கப்பட்டு சிறிது நேரத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காட்சி புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது. இது, போரின் போது சிறைப்பிடிக்கப்பட்ட சிறுவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக உள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக புதிய தலைமுறை ஒளிபரப்பிய, "இனவெறித் தீ: இரையான இளந்தளிர்கள்" ஆவணப்படம் குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் தெரிவித்த கருத்துகளை இப்போது பார்க்கலாம்.
இலங்கையில் இறுதிக் கட்ட போரின் போது நடந்த குற்றங்களையும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ள ஒரு சர்வதேச விசாரணையை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி ராமககிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதி கட்டப் போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டது ஒரு பாலச்சந்திரன் மட்டுமல்ல பல பாலச்சந்திரன் என காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
போரில் இறந்த குழந்தைகள் பற்றி யாரும் பேசவில்லை. தற்போது வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம் சர்வதேச சமூகமும் சரி. அரசியல் தலைவர்களும் இலங்கையில் மனித உரிமை மீறல், போர்க்குற்றம் நடந்ததை ஒப்புக்கொள்ளும் வகையில் இருக்கிறது. இலங்கையில் இவற்றிற்கு எல்லாம் மேல் நடந்தது இனப்படுகொலை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஒரு இனம் மொழி எப்படி அழிக்கப்படுகிறது என்பதற்கு இந்த ஆவணப்படம் ஒரு ஆதாரம். பாலச்சந்திரன் போன்ற பல சிறுவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். சிறார்கள் எப்படி போர்க்குற்றவாளிகள் ஆவார்கள் என்பது தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
அதிர்ச்சியில் உறைந்த சர்வதேச சமூகம்: 
தமிழகம் மட்டுமின்றி, உலக அளவிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது புதிய தலைமுறை ஒளிபரப்பிய "இனவெறித் தீ: இரையான இளந்தளிர்கள்" ஆவணப்படம். தமிழகத்திலும், இலங்கையிலும் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையின் போர்க்குற்றங்களை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
சர்வதேச விசாரணை அவசியம் : இந்தக் காட்சிகளைப் பார்க்கும் எவரும் உறைந்துதான் போவார்கள். இலங்கை அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த படுகொலைகள் குறித்து சர்வதேச சமூகம் என்ன நினைக்கிறது என்பதை அறிந்து கொள்ள, பன்னாட்டு பிரதிநிதிகளுக்கு புதிய தலைமுறை இவற்றை காண்பித்தது.
இதனைப் பார்த்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்காட் : " இதுவரை நான் பார்த்த ஆதாரங்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. இவை அனைத்தும் மனித உரிமை மீறல்கள். இந்த குற்றத்தைச் செய்தவர்களை அதற்கு பொறுப்பாக்க வேண்டும். அதற்கு சுதந்திரமான சர்வதேச விசாரணை அவசியம்" என தெரிவித்துள்ளார்.
"இலங்கையில் நடக்கக் கூடாது": காமன்வெல்த் மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்பி்ல், வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்ச சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால், இலங்கையின் கோர முகத்தை அம்பலப்படுத்தும், இத்தகைய அதிர்ச்சி ஆவணங்களாலும், இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களாலும், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
"தமிழகத்தில் நடத்த முயல வேண்டும்": இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதல் குறித்த ஆவணப்படங்கள் உலகை உலுக்கி வரும் நிலையில், ராஜபக்சவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. அதோடு, காமன்வெல்த் மாநாட்டை தமிழகத்தில் நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசின் மூலம் முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்துள்ளது.
ஓயாது ஒலிக்கும் யுத்தக் கதறல்கள்: விடுதலைப் புலிகளின் பிரச்சாரம் என்று கூறி, இந்த ஆவணப் படங்களை இலங்கை அரசு ஏற்கனவே புறந்தள்ளிவிட்டது. ஆனால் சேனல் 4 தொலைக்காட்சியும், புதிய தலைமுறையும் ஒளிபரப்பி இருக்கும் இந்த ஆவணப்படங்கள் ஒன்றை தெளிவுபடுத்தி உள்ளன என சொல்லலாம். இலங்கையில் போர் முடிந்திருக்கலாம், ஆனால், யுத்த கதறல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன என்பதுதான் அது.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........